தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் ரத்தினதுரை (70). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். அன்று நள்ளிரவில் மர்ம நபர்கள் மளிகை கடையின் ஷட்டர் பூட்டை கடப்பாரையால் உடைத்துள்ளனர்.
ஒரு பகுதி உடைபட்ட நிலையில் மறுபகுதி பூட்டு உடையாததால், ஷட்டரை வளைத்து உள்ளே சென்று பணப்பெட்டியில் வைத்திருந்த 50 பத்து ரூபாய் நாணயங்கள். குளிர் பானங்கள், சிப்ஸ், பிஸ்கட் வகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறக்க வந்த ரத்தினத்துரை மளிகை கடை உடைக்கப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

