திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, ஊரக வளர்ச்சிதுறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. இவரது மகள் இந்திரா வீட்டில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் துவாரநாதன் என்பவருக்கு சொந்தமான கார்மெண்ட்ஸ் நிறுவனம் வத்தலகுண்டு அடுத்த கே.சிங்காரக்கோட்டை அருகே ஒட்டுப்பட்டியில் உள்ளது. இந்த, கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 8,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கிருந்து வெளி மாநிலம் வெளிநாடுகளுக்கு கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகள் இந்திரா வீட்டில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில் மதியம் 2 மணி முதல் கே.சிங்காரக்கோட்டை அடுத்த ஒட்டுபட்டியில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அவர்கள் அங்குள்ள பல்வேறு கோப்புகளை எடுத்து ஜி.எஸ்.டி. வரவு செலவுகளை கணக்குகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

