அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று மாலை திடீரென கடும் சூறைக்காற்றுடன் கூடிய ஆழம் கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை, குழுமூர் குமிளங்குழி, நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் மழையின் வேகம் மிக அதிக அளவில் இருந்ததால் பொதுமக்கள் வாகனங்களை ஓட்ட இயலாது வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
அப்போது திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியதால், வீடுகளில் இருந்த சிறுவர்கள் வெளியே வந்து மழையில் நனைந்தபடியே ஆலங்கட்டியை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

இதேபோன்று பெரியவர்களும் ஆலங்கட்டி மழை பெய்த கண்டதும், அதை கைகளில் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நல்லாம்பாளையம்கிராமத்தில் கடும் சூறைக்காற்றால் ஆங்காங்கே மரங்களும் சாய்ந்து விழுந்தது. குறிப்பாக மாமரம் ஒன்று காய்த்து தொங்கிய நிலையில் சூறைக்காற்றுடன் வீசிய ஆலங்கட்டி மலையில் முறிந்து கீழே விழுந்தது. இதில் மாங்காய்கள் சாலை மற்றும் தரையில் விழுந்து சிதறிக் கிடந்தது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
கோடை வெயில் வாட்டிய நிலையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை வெயிலை தணித்ததுடன், பொதுமக்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்திய அதேவேளையில், மரங்கள் முறிந்து விழுந்தது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.

