தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
கோவை, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை முன்னெச்சரிக்கை காரணமாக 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் மழை நிவாரண பணிகள், கண்காணிப்பு ஆகியவற்றுக்காக 15 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் சென்னை பெரு நகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம், நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம் கக்கன் பாலம், அண்ணா சாலை, ஜிபி சாலை இணைப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். தற்காலிக முகாம்கள், தாழ்வான பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
மேலும் உதயநிதி தன்னுடைய சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார். திருவல்லிக்கேணி, விஆர் தெரு, சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அப்போது கனமழையை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.