குளித்தலை அருகே இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து அடியோடு சாய்ந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்தது. இரவு முழுவதும் இருளில் மூழ்கி இருந்த மக்கள் தற்போது தீயணைப்பு துறையினர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூத்திபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 140 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியான அய்யர்மலை, தேசியமங்கலம், குப்பாச்சிப்பட்டி, சத்தியமங்கலம் உள்ளிட்ட
பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்தும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள், தகரங்கள் பலத்த காற்றினால் பெயர்ந்து தூக்கி வீசப்பட்டது. அந்த முகாமில் இருந்த பல மரங்கள், முறிந்தும், அடியோடு சாய்ந்தும் சேதமடைந்தது.
அப்போது அந்த பகுதியிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் 140 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் இருளில் இருந்து வந்தனர். இரவில் வந்த தீயணைப்புத் துறையினர் மழையினாலும், காற்றினாலும், இருளினாலும் மரங்களை அப்புறப்படுத்த முடியாமல் சென்று விட்டனர். தற்போது முசிறி தீயணைப்பு துறையினர் வந்து வீடுகளில் விழுந்த மரங்கள், மர கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
100 மீட்டர் தூரத்தில் உள்ள மின்துறையினர் இதுவரை வந்து மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இதனால் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இரவு முழுவதும் அங்கன்வாடி மையம் மற்றும் கோவிலில் இருளில் குழந்தைகளை வைத்து இருந்து வந்தனர்..