கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 19 வரை, சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், நாளை கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரும் 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை விலகி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு மழை வருமா என்ற சந்தேகத்திற்கு தனியார் வானிலை ஆய்வாளர்கள் மழை உண்டு என கூறியிருந்தனர். எனினும் இதுகுறித்து இப்போதே கணிக்க முடியாது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது