கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளான பேரூர், மாதம்பட்டி, ஆலாந்துறை, பூலுவபட்டி , விராலியூர், நரசிபுரம், வடவள்ளி, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இருந்து கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான
மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களில் தொடர்ந்து செய்து வரும் மழையால் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை 37.82 அடியாக உயர்ந்து உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட முழு கொள்ளளவான 44.61 அடி வரைக்கும் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனால் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க முடியும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.