மாமன் படம் வெற்றி அடைய மதுரையில் மண்சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது என நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார். விலங்கு இணைய தொடரின் மூலம் பிரபலமான பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி இன்று திரைக்கு வந்து உள்ள படம் மாமன். இப்படத்தின் கதையை சூரி எழுதியுள்ளார். ஹீரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சூரி குடும்ப செண்டிமெண்டில் வெற்றியை கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை பாகம் 1, விடுதலை பாகம் 2, கொட்டு காளி, கருடன் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்து நாளை வெளியாக உள்ள மாமன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற அவரது ரசிகர்கள் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பூமாலை, தேங்காய்,பழ தட்டுடன் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். சாமி தரிசனம் செய்த பின்பு கோவில் வாசலில் அமர்ந்து அவரது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் நாளை திரையிட உள்ள மாமன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற இறைவனை பிரார்த்தனை செய்து மண் சோறு சாப்பிட்டதாகவும் . அடுத்தடுத்து வரக்கூடிய திரைப்படங்கள் வெற்றி பெற தொடர்ந்து இறைவனை வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர்களை தம்பிகள் என சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது என வேதனை தெரிவித்துள்ள நடிகர் சூரி, “ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறான செயலை செய்து என்னை வேதனையில் ஆழ்த்திவிட்டீர்கள். படம் ஓட வேண்டும் என்பதற்காக மண்சோறு சாப்பிடுவது முட்டாள்தனமானது. படம் எப்படி இருந்தாலும், மண்சோறு சாப்பிட்டால் ஓடிவிடுமா? இந்த பணத்தில் 4 பேருக்கு சாப்பாடு, தண்ணீர் வாங்கி கொடுத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். மண்சோறு சாப்பிட்டவர்கள், எனது ரசிகர்களாக இருக்க தகுதி இல்லாதவர்கள்” எனக் கூறியுள்ளார்.