இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் நடிகர் விமல் மற்றும் நடிகை சங்கீதா(புதுமுகம்) நடிப்பில் மாசாணியம்மன் மற்றும் விநாயகா பிக்சர்ஸின் வடம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆக.2 ஆம் தேதி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பூஜையுடன் துவங்கியது. முற்றிலும் வடமாடு குறித்த கதையை கருவாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மதுரை,கோவை,தென்காசி
உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று நேற்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.இதனை தொடர்ந்து இன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் விமல் மற்றும் நடிகை சங்கீதா மற்றும் படக்குழுவினர் கொடிக்கம்பம் முன்பு தீபம் ஏற்றி வைத்தும் மாசாணி அம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தும் வழிபட்டனர்.
படக்குழுவினருக்கு மாசாணியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் மாலை, அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து நடிகர் விமல்,நடிகை சங்கீதா ஆகியோர் வந்திருந்த தகவலை அறிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சூழ்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள அனுமதி கேட்டனர்.
தொடர்ந்து அவர்களின் செல்போனை பெற்று அவர்களுடன் உற்சாகமாக நடிகர் விமல் மற்றும் நடிகை சங்கீதா ஆகியோர் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து கொடுத்து வழிபட்டனர்.