கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நாகமங்கலம் என்ற பகுதியில் டாடா நிறுவன தொழிற்சாலைக்கு சொந்தமான விடியல் ரெசிடென்சி என்ற பெண்களுக்கான தங்கு விடுதி இயங்கி வருகிறது. 11 மாடிகளை கொண்ட எட்டு கட்டிடங்களில் சுமார் 6000க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த விடுதியில் உள்ள ஒரு அறையின் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து கேமரா வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விடுதி நிர்வாகத்தை கண்டித்தும் தொடர்ந்து மூன்று நாட்களாக அங்குள்ள ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில் கேமராவை வைத்த அதே அறையில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுக்குமாரி குப்தா என்ற பெண் தொழிலாளியை கேமரா வைத்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது ஆண் நண்பராண ரவி பிரதாப் சிங் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இதனை அடுத்து டெல்லியில் பதுங்கி இருந்த நீலுக்குமாரி குப்தாவின் ஆண் நண்பரான ரவி பிரதாப் சிங்கை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்திருக்கிறார்கள். இதனை அடுத்து கைது செய்த அவரை விமான மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில் அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பிறகு பல்வேறு உண்மை தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகிறது.

