அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வெள்ளாழத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் என்எல்சியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி. நேற்று இரவு இருவரும் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சின்னவளையம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இன்று காலை மணிகண்டனை வேலைக்கு அனுப்பிவிட்டு ரேணுகாதேவி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரேணுகாதேவி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகை, இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் முப்பதாயிரம் ரொக்க பணத்தை மர்ம
நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ரேணுகா தேவி புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை ஆஷா பிளேடால் அறுத்து உள்ளே புகுந்தது தெரியவந்தது. இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் அடையாளங்கள் சேகரிக்கப்பட்டன. பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.