தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் இசக்கிராஜ். தொழிலாளியான இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணைப் பார்க்க அடிக்கடி அப்பகுதிக்குச் சென்று வந்தபோது, அங்கு தனது 4 வயது மகளுடன் தனியாக வசித்து வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் இசக்கிராஜுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் உடன்குடி செட்டியாபத்தில் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியேறினார். அங்கு இசக்கிராஜ் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தச் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி இசக்கிராஜும், அந்த இளம்பெண்ணும் உடன்குடி அரசு மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை முடிவில், அந்த 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும், அதன் காரணமாக ஏற்பட்ட காயங்களாலேயே உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இசக்கிராஜைப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
விசாரணையில் இசக்கிராஜ் அளித்த வாக்குமூலத்தில், “சம்பவத்தன்று நான் அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க அவர் வீட்டிற்குச் சென்றேன். ஆனால் அவர் வீட்டில் இல்லை. அங்கு அந்த 4 வயது குழந்தை மட்டும் தனியாக இருந்ததைக் கண்ட நான், அந்த குழந்தையை பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்து கொண்டிருந்தபோது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த இளம்பெண், அதிர்ச்சியுடன் என்ன நடக்கிறது என்று கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட நான், குழந்தை தண்ணீர் கேட்டதாகவும், வேகமாகத் தண்ணீர் குடித்ததால் மூச்சுத்திணறி மயங்கிவிட்டதாகவும் நாடகமாடினேன். ஆனால் பிரேதப் பரிசோதனையில் நான் மாட்டிக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இசக்கிராஜை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இச்சம்பவம் உடன்குடி பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

