ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் அதிகரித்து வருகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 5-ல் ஒரு பகுதி பொதுவாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் போர் தொடங்கியதில் இருந்து இந்த பாதை வழியாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய இந்த பதட்டங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 அமெரிக்க டாலருக்கு (இந்திய ரூபாயில் 9,221.34) மேல் உயர்ந்தது. ஜலசந்தி போக்குவரத்து இந்த மாதம் இறுதி வரை நிறுத்தப்பட்டால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 150 டாலரை தாண்டி (ரூ.13,841.80) எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்தது. வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்தது.
சிலிண்டர் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.150 தள்ளுபடி நிறுத்தப்பட்டதால், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு மொத்தம் ரூ.265 கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
இதனால், பெங்களூருவில் நிலவி வரும் வணிகரீதியான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக,நாளை முதல் (மார்ச் 10, 2026) ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டல்களையே நம்பி இருக்கும் உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

