Skip to content

இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள், அரசு ஊழியர்களுக்கு TAPS –

தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்க ஒன்றிய அரசு தொடர்ந்து மறுப்பதாகவும், தமிழ்நாடு எப்போதும் சந்திக்காத சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

16வது நிதிக்குழு அறிக்கை தமிழ்நாட்டுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக நிதியமைச்சர் வருத்தம் தெரிவித்தார். நிதிப்பங்கீட்டில் 0.4% என்ற மிகக் குறைந்த உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும், கடந்த 5 ஆண்டுகளில் பேரிடர் நிதியாக ரூ.50,900 கோடி கோரியும் ரூ.1,151 கோடி மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தமிழ்நாட்டுக்கு எதிரான பாரபட்சத்தை வெளிப்படுத்துவதாக அமைச்சர் விமர்சித்தார்.மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.5,000 வழங்கப்பட்டதால் மகளிர் மகிழ்ச்சியில் உள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.

எதிர்கால தடைகளை கணித்து முன்கூட்டியே இத்தொகை வழங்கப்பட்டதாகவும், இத்திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு மாதங்களில் ரூ.9,000 வரை மகளிருக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடியும், மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.1,722 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இலங்கை தமிழர்களுக்கு 10,469 வீடுகள் கட்ட ரூ.639 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவித்தொகை, திறன்பயிற்சி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரூ.486 கோடி செலவிடப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்ற ரூ.327 கோடியிலும், மதுரை மத்திய சிறையை மாற்றி அமைக்க ரூ.229 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்த ரூ.11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 23 ஆண்டுகால அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் உயர் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 385 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!