தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய ரஜினி, தனது தனித்துவமான நடிப்பு, தனது ஸ்டைலான தனி பாணி மூலம் இன்னும் உச்சத்தில் இருந்து வருகிறார். எனவே, இந்த மைல்கல் சாதனையை கொண்டாடும் விதமாக, ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் #50YearsOfRajinism என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் தங்கள் அன்பையும் பாராட்டுகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், ரஜினிகாந்தின் புதிய திரைப்படமான ‘கூலி’ ஆகஸ்ட் 14, 2025 அன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், ரஜினியின் 50-வது திரைப்பயண ஆண்டை மேலும் சிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.
படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிற்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் படம், ரஜினியின் ஆக்ரோஷமான நடிப்பு மற்றும் மாஸ் காட்சிகளால் மற்றொரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் கூறியது இன்னுமே படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
படத்தை பார்த்துவிட்டு ” நாளை வெளியாகவுள்ள அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட #Coolie திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் எல்லா வகையான ரசிகர்களை கவரும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளது. எனக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது” எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், திரையுலகில் 50 வருடங்கள் நிறைவடைந்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐயா அவர்களை வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.