Skip to content

50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கு செல்லும் மனிதர்கள்- நாசா

நாசாவின் அறிவிப்புப்படி, பிப்.6-ம் தேதி 4 விண்வெளி வீரர்களுடன் இந்த விண்கலம் விண்ணில் பாய்கிறது. 1972-ல் அப்பல்லோ திட்டம் முடிவுக்கு வந்த பிறகு, நிலவை நோக்கிச் செல்லும் முதல் மனிதப் பயணம் இதுவாகும். ஜனவரி 31 முதல் பிப்ரவரி 14 வரை இதற்கான ‘லான்ச் விண்டோ’ திறந்திருக்கும். வானிலை மாற்றங்கள் காரணமாக பிப்.6 அன்று ஏவ முடியாவிட்டால், பிப்.7, 8, 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் மாற்றுத் தேதிகளாக (Backup dates) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 10 நாள் பயணத்தில் நாசாவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி முகமையின் ஜெர்மி ஹேன்சன் ஆகிய 4 வீரர்கள் நிலவைச் சுற்றி வர உள்ளனர்.

இந்த விண்கலம் நிலவில் தரையிறங்காது அல்லது நிலவைச் சுற்றி வராது. மாறாக, நிலவுக்கு மிக அருகில் சென்று ‘ஃப்ளைபை’ மேற்கொண்டு விட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பும். நாசாவின் சக்திவாய்ந்த எஸ்.எல்.எஸ் (Space Launch System) ராக்கெட் மூலம் புளோரிடாவின் கேப் கனாவெரல் இருந்து ஓரியன் (Orion) விண்கலம் ஏவப்படும். முதலில் பூமியைச் சுற்றி வந்து விண்கலத்தின் உயிர் காக்கும் சாதனங்கள் (Life support equipment) சோதிக்கப்படும்.

எல்லாம் சரியாக இருந்தால், விண்கலம் நிலவை நோக்கிச் செல்லும். நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி (Slingshot effect) மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டாலும் விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப உதவும்.

ஆர்டெமிஸ் II என்பது மனிதர்கள் மீண்டும் நிலவில் தரை இறங்குவதற்கு முன்னால் மேற்கொள்ளப்படும் சோதனைப் பயணம் ஆகும். இந்தத் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆர்டெமிஸ் III திட்டம் மூலம் மனிதர்கள் மீண்டும் நிலவில் தரை இறக்கப்படுவார்கள். இத்திட்டத்தின் முதல் கட்டமாக, ஜன.17-ம் தேதி ராக்கெட் மற்றும் விண்கலம் ஆகியவை ஏவுதளத்திற்கு கொண்டு வரப்படும். அங்கு எரிபொருள் நிரப்புதல் மற்றும் போலி கவுண்ட்டவுன் போன்ற ஒத்திகைகள் (Dress rehearsals) நடத்தப்பட்டு, ஏவுதலுக்குத் தயார் செய்யப்படும். 53 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டி ஆழமான விண்வெளிக்குச் செல்லும் இந்த நிகழ்வு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘ஆர்டெமிஸ் – 2’ விண்கலத்தின், ‘கவுன்ட் டவுன்’ ஒத்திகையை நாசா துவக்கியது. கடந்த 1972ம் ஆண்டுக்கு பின், நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, நிலவுக்கு அனுப்பப்படும் ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவதற்கான இரண்டு நாள் கவுன்ட் டவுன் ஒத்திகை நேற்று முன்தினம் துவங்கியது. ராக்கெட் மற்றும் விண்கலம், மனிதர்களை சுமந்து செல்ல பாதுகாப்பானது தானா என்பதை உறுதிப்படுத்தும் கடைசி மற்றும் மிக முக்கியமான சோதனை இது. ஏவுதலுக்கு முன்பே அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் சரியாக செயல்படுகிறதா என்பது இந்த ஒத்திகையின் போது உறுதி செய்யப்படும். இன்ஜின்களை மட்டும் இயக்காமல், மற்ற எல்லா பணிகளையும் ஒருமுறை ஒத்திகை பார்த்து உறுதி செய்து கொள்வதற்காகவே இந்த கவுன்ட் டவுன் துவங்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவைப் பொறுத்தே, நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் நான்கு பேரின் பயணம் எப்போது துவங்கும் என்பது தீர்மானிக்கப்படும். நிலவுக்கு செல்லவுள்ள கமாண்டர் ரீட் வைஸ்மேன் மற்றும் அவரது குழுவினருக்கு கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!