Skip to content

வரதட்சணை கொடுமை…காதல் மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பரமேஷ். டிரைவரான இவரும் கரங்கோட்டா கிராமத்தை சேர்ந்த அனுஷா (20). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மார்ச் 12ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணமான 3வது மாதத்தில் இருந்து கூடுதல் வரதட்சணையாக பணம், நகை கேட்டு அனுஷாவை பரமேஷ் தொல்லை கொடுத்து வந்தார். இந்நிலையில், அனுஷாவை நேற்று பரமேஷ் மீண்டும் தாக்கியுள்ளார். இதை அறிந்த அனுஷாவின் தாயார் தனது மகளை வீட்டிற்கு அழைத்து செல்ல சாய்புரி கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது, மாமியாரிடம் பேசி சமாதானபடுத்தி அனுஷாவை தனது வீட்டிற்கு பரமேஷ் அழைத்து வந்துள்ளார்.

சாய்புரி கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகே தெருவில் நடந்து சென்றபோது அனுஷாவுடன் பரமேஷ் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த பரமேஷ் வீட்டின் அருகே கிடந்த உருட்டு கட்டையால் காதல் மனைவி அனுஷாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அனுஷா நடுத்தெருவில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அனுஷாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனுஷாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காதல் மனைவியை அடித்துக்கொன்று தலைமறைவான பரமேஷ் மற்றும் அவரது பெற்றோரை தீவிரமாக தேடி வருகின்றனர். அனுஷாவை பரமேஷ் கட்டையால் தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!