தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, சிறையிலிருந்து வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் அவரது தம்பியும் சேர்ந்து கூலிப்படையுடன் இணைந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் பெத்தரவிடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் லாலு ஸ்ரீனு (38). இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். லாலு ஸ்ரீனு கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ஓங்கோல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில், ஜான்சிக்கு தனது தம்பியின் நண்பரான கார் டிரைவர் சூரிய நாராயணாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருந்த லாலு ஸ்ரீனுவுக்கு மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. தன்னைச் சந்திக்க வந்த மனைவியையும் மைத்துனரையும் அவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்த ஜான்சி, கணவர் சிறையிலிருந்து வெளியே வருவதற்கு முன்பே அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். இதற்காக தனது கள்ளக்காதலன் மற்றும் குண்டூரைச் சேர்ந்த ஒரு கூலிப்படையை அணுகி, 2 லட்சம் ரூபாய் பேசி 1 லட்சம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்துள்ளார்.
நடுரோட்டில் நடந்த கொலை: நேற்று முன்தினம் லாலு ஸ்ரீனு ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வது போல நாடகமாடிய ஜான்சி மற்றும் அவரது தம்பி, காரில் அவரை அழைத்துச் சென்றனர். இவர்களது காரைப் பின்தொடர்ந்து கள்ளக்காதலன் சூரிய நாராயணாவும் கூலிப்படையினரும் மற்றொரு காரில் வந்தனர்.
பயணத்தின்போது சிறுநீர் கழிக்க லாலு ஸ்ரீனு காரை விட்டு கீழே இறங்கியபோது, ஜான்சியும் அவரது தம்பியும் அவர் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவினர். நிலைகுலைந்த அவரை கூலிப்படையினர் காரில் தூக்கிப்போட்டனர். அப்போது ஜான்சி மற்றும் அவரது தம்பி மறைத்து வைத்திருந்த கத்தியால் லாலு ஸ்ரீனுவின் வயிற்றில் சரமாரியாகக் குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கொலைக்கு பிறகு, கூலிப்படையினர் அறிவுறுத்தலின்படி ஜான்சியும் அவரது தம்பியும் போலீசில் சரணடைந்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை ஜான்சி ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள சூரிய நாராயணா உள்ளிட்ட 5 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

