ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் ராவ்லா பகுதியில் கடந்த 31-ம் தேதி சாலை விபத்து ஒன்று நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு 25 வயதான ஆஷிஷ் என்பவர் சடலமாகக் கிடப்பதையும், அவரது மனைவி அஞ்சலி மயங்கிய நிலையில் கிடப்பதையும் கண்டனர். மர்ம நபர்கள் தங்கள் மீது காரை மோதிவிட்டு, நகை மற்றும் செல்போன்களைப் பறித்துச் சென்றதாக அஞ்சலி போலீசாரிடம் கூறினார்.
ஆரம்பத்தில் இதனை விபத்து என நினைத்த போலீசாருக்கு, பிரேத பரிசோதனை அறிக்கை பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஆஷிஷ் விபத்தில் இறக்கவில்லை என்றும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டும், இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் அதில் உறுதியானது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அஞ்சலியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவரது செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆஷிஷுக்கும் அஞ்சலிக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும், திருமணத்திற்கு முன்பே சஞ்சய் என்பவரை அஞ்சலி காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் சஞ்சயுடனான தொடர்பைத் தொடர்ந்த அஞ்சலி, தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார்.
சம்பவத்தன்று நடைப்பயிற்சி செல்வதாகக் கூறி கணவனை அழைத்துச் சென்ற அஞ்சலி, ஏற்கனவே திட்டமிட்டபடி புதரில் மறைந்திருந்த காதலன் சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் ரோஹித், சித்தார்த் ஆகியோரிடம் அவரைச் சிக்க வைத்தார். அவர்கள் ஆஷிஷை இரும்பு கம்பியால் தாக்கியதோடு, மப்ளரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் இது விபத்து போலத் தெரிய வேண்டும் என்பதற்காக அஞ்சலி மயங்கி விழுந்தது போல நாடகமாடியுள்ளார். போலீசார் அஞ்சலி, சஞ்சய் உட்பட 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

