தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார், கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததை கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்திருந்தார். “இது துரதிஷ்டவசமான சம்பவம். ஒரு நபரின் தவறு மட்டுமல்ல, இது சமூகத்தின் மொத்தப் பொறுப்பு. நீண்ட நாட்களாக நடக்கக் காத்திருந்த விபத்து இது” என்று கூறிய அஜித், ஆந்திரா தியேட்டர், பெங்களூர் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததை சுட்டிக்காட்டினார்.
மேலும், பொது வெளியில் நடத்தை குறித்து அனைவரும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அஜித்தின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரால் நடிகர் விஜய்க்கு எதிரானது என்று திரித்துப் பரப்பப்பட்டன. விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் சில ஊடகங்களும் யூடியூப் சேனல்களும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. “அஜித் விஜயைத் தாக்குகிறார்” என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சை வெடித்தது. இது தமிழ் சினிமா ரசிகர் மோதலாக மாறியது.
இந்நிலையில், சர்ச்சை வெடித்த நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித் தெளிவான விளக்கம் அளித்தார். “என்றுமே நான் விஜய்க்கு எதிரானவன் அல்ல. அவருக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறேன். என் குடும்பமும் அவரது குடும்பமும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். எல்லோரும் தங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.கரூர் சம்பவம் குறித்து மீண்டும் பேசிய அஜித், “இது துரதிர்ஷ்டவசமானது. பொது வெளியில் நடத்தை குறித்து நான் உட்பட அனைவரும் பொறுப்புடன் இருக்க வேண்டும். இதை ஒரு நபரின் தவறாக மட்டும் பார்க்கக் கூடாது” என்று விளக்கினார்.
மேலும், சினிமா பத்திரிகையாளர்கள் அரசியல் பத்திரிகையாளர்களைவிட அதிக அரசியல் மயமாகிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.“எனது நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை. அஜித்-விஜய் மோதல், ரசிகர்கள் போர் என்று திரித்து வெளியிடுகின்றனர்” என்று வருத்தம் தெரிவித்த அஜித், தனது கருத்துகள் யாரையும் பாதிக்கும் நோக்கில் இல்லை என்று உறுதிப்படுத்தினார். இந்த விளக்கம் ரசிகர்கள் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

