ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியால் எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், சென்னை அணியில் இணைவதைப் பற்றி உருக்கமாகவும், உற்சாகமாகவும் பேசியுள்ளார். “எனக்கு சென்னை அணியில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கே எம்.எஸ். தோனி என்றொரு ஆள் இருக்கிறார்” என்று தொடங்கிய சஞ்சு, தோனியுடனான தனது முதல் சந்திப்பையும், அவரைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையும் நிறைவேறப்போவதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இது குறித்து பேசிய அவர் “நான் 19 வயதில் இந்திய அணிக்கு முதல் முறையாகத் தேர்வானபோது, அணியின் கேப்டனாக இருந்த தோனியைத்தான் முதலில் சந்தித்தேன். அப்போது 10-20 நாட்கள் அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஐபிஎல்லில் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு பெரிய கூட்டமே இருக்கும். அவரைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது விதி என்னை அவருடைய ட்ரெஸ்ஸிங் ரூமுக்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அடுத்த சில மாதங்கள் தோனியுடன் ட்ரெஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொள்வதற்காக மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று சஞ்சு உருக்கமாகத் தெரிவித்தார்.
சென்னை அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் பற்றியும் சஞ்சு பெருமிதத்துடன் பேசினார். “கடந்த 14 வருடங்களாக ஐபிஎல்லில் விளையாடி வருவதால், பல அணிகளைச் சேர்ந்த நண்பர்களிடம் சென்னை அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்திய வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் ‘சென்னை அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் ஐபிஎல்லின் சிறந்த ட்ரெஸ்ஸிங் ரூம்களில் ஒன்று’ என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். இதுவரை எந்தக் கெட்ட விஷயத்தையும் கேள்விப்பட்டதில்லை. இப்போது அதை நேரடியாக அனுபவிக்கப் போகிறேன்” என்று உற்சாகம் தெரிவித்தார்.
சி.எஸ்.கே என்றாலே சஞ்சுவுக்கு முதலில் நினைவுக்கு வருவது அணியின் வெற்றி பாரம்பரியம்தான். “என் ஐபிஎல் பயணம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக விளையாடிய போதெல்லாம், இது எவ்வளவு பெரிய அணி, எத்தனை முறை சாம்பியன் என்று கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அதனால் சென்னை என்றாலே வெற்றி பாரம்பரியம்தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது” என்று சஞ்சு சாம்சன் தெரிவித்தார். தோனியுடன் ஒரே அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு புதிய உத்வேகத்தை அளித்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

