அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயருமான சீனிவாசனுக்கும் , மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மேன் கார்த்திகேயனுக்கும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர். இதன் காரணமாக தீபாவளியையொட்டி நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் பணம் அன்பளிப்பு கொடுத்ததாக தெரிகிறது. வட்ட செயலாளர்களுக்கு 3000 ரூபாயும், பகுதி செயலாளர்களுக்கு 10000 ரூபாயும் அவர் கொடுத்துள்ளார். இதற்கு போட்டியாக கார்த்திகேயன் வட்ட செயலாளர்களுக்கு 5ஆயிரம் ரூபாயும், பகுதி செயலாளர்களுக்கு 10000 ரூபாயும் கொடுத்துள்ளார். பொதுவாக மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகளுக்கு தீபாவளி அன்பழிப்பு வழங்குவது வழக்கம். ஆனால் திருச்சி மாநகர மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு 2 தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. மாவட்ட செயலாளர் சீனிவாசன் கிழக்கு தொகுதியை சேர்ந்த எடத்தெருவில் வசித்து வருகிறார்.
எனவே அவருக்கு தான் சீட் என ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கார்த்திகேயன் தரப்பு எங்களுக்கு தான் சீட் என கூற ஆரம்பித்துள்ளனர். கார்த்திகேயன் ஏற்கனவே மலைக்கோட்டை பகுதியில் வசித்து வந்தார். தற்போது புதிதாக தில்லை நகர் பகுதியில் வீடு கட்டி சென்றுவிட்டார். கார்த்திகேயன் குடியிருக்கும் தில்லைநகர் பகுதி திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் வருகிறது. இதனை குறிப்பிடும் சீனிவாசன் தரப்பினர் கார்த்திகேயன் குடியிருக்கும் பகுதி மேற்கு தொகுதியில் வருகிறது. அவர் எப்படி கிழக்கு வாங்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் கார்த்திகேயன் தரப்பினர் தங்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியின் ஆசிர்வாதம் எங்களுக்குதான். அவர் தொகுதியை போய் கவனி என கூறிவிட்டார். எனவே நாங்கள் தான் திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் என அடித்து கூறுகின்றனர். கார்த்திக்கேயன் பொறுத்தவரை தொடர்ந்து மாவட்ட செயலாளருக்கு எதிராகவே வேலை செய்து வருகிறார். கேட்டால் நான் பொதுச்செயலாளருக்கு மிகவும் வேண்டியவன் என கூறுகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என சீனிவாசன் தரப்பு புகார் கூறுகின்றனர். யாருக்கு சீட் என்பது பிப்ரவரி இறுதியில் தான் தெரியும்.