பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னை சந்திக்க வந்ததாகவும், அதை தான் மறுத்ததாகவும் கூறியது பொய்யான தகவல் என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவும் உட்கட்சி மோதலின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ”பாமக நிறுவனரும் தலைவரும் நானே, அன்புமணியின் தலைவர் பதவி காலாவதியாகிவிட்டது. எங்கள் பிள்ளை அன்புமணிக்கு நாங்கள் என்ன குறை வைத்தோம்? மிகச்சிறந்த கல்வி கொடுத்தேன், எம்.பி., மத்திய அமைச்சர் என ஆக்கி அழகு பார்த்தேன்.
கடுமையாக உழைத்து தண்ணீருக்கு பதில் வியர்வையை ஊற்றி கட்சியை ஒரு ஆலமரமாக வளர்த்தேன், ஆலமரக் கிளையில் இருந்தே கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட முயற்சிக்கிறார். அன்புமணியிடம் கட்சியை கொடுத்துவிட்டு நான் தைலாபுரத்தில் டம்மியாக இருக்க முடியாது.
பாமகவில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுத்து எனக்கு எதிராக செயல்பட தூண்டுகிறார் அன்புமணி ராமதாஸ்.
ஐயா, ஐயா என்று சென்னவர்களை ராமதாஸ் என்று செல்ல வைத்தது அன்புமணி தான். என்னை சந்திக்க வந்ததாகவும், நான் மறுத்ததாகவும் அன்புமணி பொய் சொல்கிறார்.
46 ஆண்டுகாலம் கட்சியை கட்டிக் காத்தது நான்தான். தைலாபுரம் வீட்டிற்கு என்னை சந்திக்க அவர் வரவில்லை, நான் கதவையும் அடைக்கவில்லை. சூது செய்து பாமகவை பறிக்க அன்புமணி முயற்சி செய்வதாக ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.