அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று வானகரம் அருகே நடைபெற்ற பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டத்தில், ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம் ஆவேசமாகப் பேசினார். “தொண்டர்களால் உருவான கட்சி… தொண்டர்களுக்காக செயல்படுகிற கட்சி… இது எங்க கட்சி டா…” என்று கர்ஜித்த அவர், “சண்முகம் வெளியேறுகிறார், தங்கமணி வெளியே செல்கிறார் என்று பேசினார்கள்; எங்கே சென்றோம்? என் உயிருள்ளவரை நான் அதிமுகவில் தான் இருப்பேன்” என்று உறுதியளித்தார்.
கட்சிக்குள் பிளவு பேசியவர்களை கடுமையாகச் சாடினார்.சண்முகம் தொடர்ந்து, “திமுக மட்டும் எதிரி அல்ல; நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சில

அரசியல் புரோக்கர்கள் இருக்கிறார்கள்; அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். துரோகிகளை கண்டுகொள்ள வேண்டும்” என்று எச்சரித்தார். “அதிகாரம், ஆட்சி, பண பலத்தை மீறி அதிமுகவை நிலைநிறுத்தியுள்ளோம்.
அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்ற நிலையை எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்துள்ளார்” என்று பழனிசாமியை புகழ்ந்தார்.“இன்னும் தேர்தலுக்கு 100 நாட்கள்தான் இருக்கிறது; திமுக ஆட்சிக்கு முடிவுரை கவுன்டவுன் ஸ்டார்ட்” என்று கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் சண்முகம். திமுகவின் ஊழல், வாக்குறுதி மீறல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் விற்பனை போன்றவற்றை மையப்படுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கட்சி ஒற்றுமையை வலியுறுத்திய அவர், உள்கட்சி துரோகிகளை வேரோடு பிடுங்க வேண்டும் என்றும் கூறினார். இந்தக் கூட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுகவை வீழ்த்துவதற்கான உத்தியை வகுப்பதே முக்கிய நோக்கம். சி.வி. சண்முகத்தின் ஆவேசப் பேச்சு தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. “எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது” என்ற அவரது வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. கூட்டம் முடிந்த பிறகு, திமுகவுக்கு எதிரான புதிய பிரச்சாரங்கள் தொடங்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

