திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்துகொண்டு இருக்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. ஏன் பீகார் மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் நினைத்தது நடக்காது. அங்கேயும் மக்களை எழுச்சி பெற வைக்க தேர்தல் ஆணையம் உதவியிருக்கிறது என்பதே உண்மை. நாளை ஜெர்மனியில் அயலக அணி நிர்வாகிகளை சந்திக்க உள்ளேன். விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. நான் அதிகம் பேச மாட்டேன். பேச்சை குறைத்து செயலில் நம் திறமையை காட்ட வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 32,81,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு அரசுமுறைப் பயணங்கள் போல என் பயணம் இருக்காது. என் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருகின்றன, வந்துள்ளன. திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்துகொண்டு இருக்கின்றனர்” என்றார்.