Skip to content

ICC உலக டெஸ்ட் கிரிக்கெட் – பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது

ஆஸ்திரேலிய  ஆண்கள் அணி மட்டுமே ஐசிசி நடத்தும் அனைத்து வடிவிலான உலகக் கோப்பை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் 13 முறை இறுதிப் போட்டியில் கால்பதித்து 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி தொடர்களில் ஒரே ஒரு முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அந்த அணி பட்டம் வென்றிருந்தது. அதன் பின்னர் பலமுறை அந்த அணி நாக் அவுட் சுற்று வரை வருவதும் வெளியேறுவதுமாக இருந்துள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது.

2023-25-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 30 வீரர்களை பயன்படுத்தியது. இது மற்ற அணிகளைவிட அதிகமாகும். பார்மில் இருந்த வீரர்களை பேட்டிங், பந்துவீச்சில் சரியாக பயன்படுத்தி வெற்றிக்கான வழிகளை கண்டறிந்தது. அந்த அணி கடைசியாக விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை குவித்து முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப் போட்டி நடைபெறும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் ஒன்றில் மட்டுமே அந்த அணி தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது தென் ஆப்பிரிக்க அணி. இந்த போட்டி 3 நாட்களில் முடிவடைந்திருந்தது. ஆஸ்திரேலிய அணி கடந்த 10 வருடங்களாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்திக்கவில்லை.

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க வீரர்களாக எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் களமிறங்க உள்ளனர். கேப்டன் தெம்பா பவுமா 4-வது வீரராக களமிறங்குவார். டோனி டி ஸோர்ஸி, டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரெய்ன், ஆல்ரவுண்டர் கார்பின் போஷ் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடும். பந்து வீச்சில் காகிசோ ரபாடா, மார்கோ யான்சன், லுங்கி நிகிடி, கேசவ் மகராஜ் கூட்டணி ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு  ரூ.30.80 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு வழங்கப்படும்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 11 பேர் கொண்ட பட்டியலை இரு அணிகளும் அறிவித்தன. அதன் விவரம்:

ஆஸ்திரேலியா: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஷ் லபுஷேன், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்.

தென் ஆப்பிரிக்கா: தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின், மார்கோ யான்சன், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.

 

error: Content is protected !!