மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார், சதீஷ் சந்திர சர்மா, வினோத் சந்திரன் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர், மாவட்ட நீதிபதியாக நேரடியாக நியமனம் செய்ய தகுதி பெறுவார்.ஆனால், ஒருவர் ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிவிட்டு, பின், 10 ஆண்டுகள் இடைவெளிவிட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினால், அவர் மாவட்ட நீதிபதி பதவிக்கு தகுதி பெறமாட்டார்.அவர் இடைப்பட்ட காலத்தில் வழக்கறிஞராக இல்லை என்பது தான் கருத்தில் கொள்ளப் படும்.
எனவே, ஏழு ஆண்டுகள் தொடர்ந்து வழக்கறிஞராக பணியாற்றிவரை மட்டுமே மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியும். மாவட்ட கூடுதல் நீதிபதி நியமனத்திற்கான தகுதி என்பது, தேர்வு செய்யும் நேரத்தில் பரிசீலிக்கப்படும். விண்ணப்பிக்கும் காலத்தில் கருத்தில் கொள்ளப்படாது. நீதித்துறை அலுவலர்களான இவர்கள், மாவட்ட நீதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடாது என கூறுவது முரண்பாடாக இருக்கிறது.மேலும் ஜூனியர்களாக இருப்பவர்கள், சீனியர்களுக்கு முன்பாக பதவி உயர்வு பெறுவதால், மற்றவர்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என்ற வாதத்தையும் நிராகரிக்கிறோம்.ஏனெனில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருவர் மாவட்ட நீதிபதி பதவிக்காக பணியமர்த்தப்படுகிறார். இதனால், மற்றவர்கள் மனவருத்தம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அனைவருக்கும் சமவாய்ப்பு என்பதை உறுதிசெய்யும் வகையில், மாவட்ட நீதிபதி மற்றும் கூடுதல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது, விண்ணப்ப தேதியின்போது, 35 ஆக பூர்த்தியாகி இருக்க வேண்டும்.அனைத்து மாநில அரசுகளும் உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, இன்னும் மூன்று மாத காலத்துக்குள்ளாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப விதிகளை திருத்த வேண்டும்.
இவ்வாறு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.