Skip to content

‘காயம் ஆற்றும் மருந்து இளையராஜாவின் இசை’- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

கரூரில் நேற்று இசைஞானி இளையராஜாவின் இசை ராஜங்கம்   என்ற பெயரில் இன்னிசை கச்சேரி நடந்தது. ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் கரூர் – திருச்சி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி திறந்த வெளி திடலில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெற்ற  இசை நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள்  வந்து குவிந்தனர்.  கட்டுக்கடங்காத ரசிகர்கள் திரண்டனர். இந்த  இசை  நிகழ்ச்சியில்,  முன்னாள் அமைச்சர்   செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.  விழா ஏற்பாட்டாளர்களுக்கும் பொன்னாடை போர்த்தினார்.  பின்னர் இசை நிகழ்ச்சியை கண்டுகளித்தார். இசை நிகழ்ச்சியின் நடுவே,  மேடைக்கு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இளையராஜாவை வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது: கரூரில் அடுத்த ஒரு ஆண்டிற்குள் மீண்டும் இளையராஜா  இசை  நிகழ்ச்சி நடத்தப்படும் , அதற்கான தேதியையும் கேட்டுள்ளேன், கரூரில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடத்துவது தனது நீண்ட கால ஆசை, போற்றுதலுக்குரிய இசைஞானி இளையராஜா அவர்களுக்கு  கரூர்  மாவட்ட மக்கள் சார்பில்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  திராவிட மாடல் ஆட்சியின் நாயகர்  மாண்புமிகு தளபதி  அவர்கள் சட்டமன்றத்திலேயே  இசைஞானியை பாராட்டி, அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என இளையராஜாவுக்கு பெருமை சேர்த்தார்.  அவருக்கு நன்றி, பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். இசை என்றால் இளையராஜா,   அவரது இசை காயம் ஆற்றும் மருந்தாக,  எல்லோருக்கும் எல்லாமுமாக அவரது இசை இருக்கிறது. இசை என்றால் இளையராஜா தான்.  தமிழ்நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும் அவர் பெருமை சேர்த்து உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.  நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் தங்கவேல், காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், ரசிகர்கள்  பெருமளவில் திரண்டிருந்தனர்.  
error: Content is protected !!