தேன்கனிக்கோட்டை: கள்ளக்காதலியின் 2 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா(28). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே சேசுராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரின்சி(24) என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவனை பிரிந்த பிரின்சி சேசுராஜபுரம் கிராமத்தில் உள்ள தனது தாயாருடன் வசித்து வருகிறார். அவ்வப்போது, சூர்யா தனது குழந்தையை பார்த்து விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரின்சிக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி பெரியநாயகம் (40) என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டு, இருவரும் கணவன், மனைவி போல் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 11.12.2025 அன்று, குழந்தையை காய்ச்சல் பாதிப்புடன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதனிடையே, தனது குழந்தை சாவில் சந்தேகம் உள்ளது என அஞ்செட்டி போலீசில் சூர்யா புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் பிறப்புறுப்பில் உள்காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரின்சியின் கள்ளக்காதலன் பெரியநாயகம், பிரின்சி வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது 2 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதனால், குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து, பெரியநாயகத்தை அஞ்செட்டி போலீசார் நேற்று, போக்சோ வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

