இந்திய திரு நாட்டின் 79வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைத்து விருதுகள் வழங்குகிறார். அதைத்தொடர்ந்து போலீஸ் , ராணுவத்தின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுவார். இதுபோல அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்படும்.
சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம், ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோவை ரயில் நிலையத்தில் வெடி குண்டுகளை கண்டறியும்
நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் நவீன கருவிகளுடன் பயணிகளின் உடைமைகள் மற்றும் நடைமேடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தண்டவாளங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகத்திற்கு இடமான நபர்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள் நடைமேடைகளில் வைக்கப்பட்டுள்ள சரக்குகள் ஆகியவற்றை முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. நாளை வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும்.