Skip to content

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் மெகா வர்த்தக ஒப்பந்தம்: இன்று முதல் அமல்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று முறைப்படி இறுதி செய்யப்பட்டது. இதற்காக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோருக்கு டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி இன்று விருந்து அளித்து கௌரவித்தார். முன்னதாக குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற அவர்களுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

டெல்லியில் இன்று மதியம் நடைபெற்ற இருதரப்பு உயர்மட்டக் குழு ஆலோசனையில், ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என அழைக்கப்படும் இந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் இரு தரப்பு உறவிலும் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்குப் பிறகு பேசிய பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் இந்த வருகை வழக்கமான தூதரகப் பயணம் அல்ல என்றும், இது இரு தரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைப்பதற்கான முன்னறிவிப்பு என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதோடு, சேவைத் துறையையும் விரிவுபடுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், 140 கோடி இந்தியர்களுக்கும் கோடிக்கணக்கான ஐரோப்பிய மக்களுக்கும் இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். உலகளாவிய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கையும் இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது. இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தமாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், இதன் மூலம் ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட இந்தியாவின் தொழில்சார்ந்த பொருட்கள் ஐரோப்பிய சந்தைகளை எளிதில் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

error: Content is protected !!