Skip to content

வந்தே மாதரம் பாடலால் இந்தியாவுக்கு விடுதலை…பிரதமர் மோடி

வங்காள மகாகவி பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “வந்தே மாதரம்” பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “வந்தே மாதரம் என்பது ஒரு பாடல் மட்டுமல்ல, ஒரு மந்திரம். இது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உந்து சக்தியாக இருந்தது. ‘வந்தே மாதரம்’ என்றால் ‘தாய்மண்ணே தலை வணங்குகிறேன்’ என்பதுதான் பொருள். இந்தப் பாடல் இந்தியாவின் விடுதலை இயக்கத்திற்கு புதிய தாக்கத்தையும் உச்சத்தையும் அளித்தது” என்று உருக்கமாகப் பேசினார்.“இந்தப் பாடல் முதலில் 1875-ல் வெளிவந்தது.

அதன் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது நெருக்கடி நிலை அமலில் இருந்தது. ஆனால் இன்று 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம் சுதந்திர இந்தியாவில் நடைபெறுகிறது. இது நமக்கு பெருமை தரும் தருணம்” என்று பிரதமர் குறிப்பிட்டார். மேலும், “2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நம் இலக்குக்கு இந்த ‘வந்தே மாதரம்’ தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். இந்தப் பாடலின் பெருமையை மீட்டெடுத்து, இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது” என்று வலியுறுத்தினார்.

வ.உ.சி.யையும் பாரதியாரையும் நினைவு கூர்ந்த பிரதமர், “ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் ஓட்டி சுதந்திர உணர்வை வெளிப்படுத்தியவர் வ.உ.சிதம்பரனார். தமிழில் கவிதைகள் எழுதி ஆங்கிலேயர்களைக் கலங்கடித்தவர் சுப்பிரமணிய பாரதியார்” என்று பாராட்டினார். பின்னர் மக்களவையில் அவர் பாரதியாரின் பிரபலமான “தாயின் மணிக்கொடி பாரீர்” பாடலின் முதல் வரிகளைப் பாடியபோது உறுப்பினர்கள் கரவொலி எழுப்பினர். இது அரங்கில் உணர்வுப்பூர்வமான தருணமாக அமைந்தது.“வந்தே மாதரம் இந்தியாவின் தேசிய கீதத்திற்கு இணையான மரியாதையைப் பெற வேண்டும். இது ஒரு மதத்துக்கோ மொழிக்கோ உரியது அல்ல, இது முழு இந்தியாவின் உணர்வு” என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இந்தப் பாடல் வெறும் காலனி ஆதிக்க எதிர்ப்பு மட்டுமல்ல, இந்தியாவின் ஒற்றுமைக்கும் தன்னம்பிக்கைக்கும் அடித்தளமாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மக்களவையில் நடைபெற்ற இந்த விவாதம், “வந்தே மாதரம்” பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இதில் பங்கேற்றுப் பேசினர். பிரதமர் மோடியின் உரை, சுதந்திரப் போராட்டத்தின் உணர்வை மீட்டெடுப்பதோடு, 2047 வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கிற்கும் உந்து சக்தியாக அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். “வந்தே மாதரம்” என்ற ஒலி மீண்டும் நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

error: Content is protected !!