Skip to content

3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது – முர்மு

டில்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு விரைவான முன்னேற்றத்தை அளித்த மறக்க முடியாத ஆண்டாக அமைந்ததாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். வலுவான அடித்தளங்களுடன் நாடு முன்னேறி வருவதாகவும், மத்திய அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் பலன்கள் ஏறத்தாழ 95 கோடி குடிமக்களை சென்றடைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்த குடியரசுத் தலைவர், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு கொண்டாட்டங்கள், பக்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு செலுத்தப்பட்ட மரியாதை, குரு தேஜ் பகதூரின் 350வது தியாக தின விழா, பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் அஞ்சலி, சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் நிகழ்வுகள், பூபன் ஹசாரிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார். இவை நாட்டில் ஒற்றுமை உணர்வையும் புதிய தலைமுறைக்கு உத்வேகத்தையும் அளிப்பதாக அவர் கூறினார்.

இந்த நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு பல வெற்றிகளையும் பெருமைக்குரிய சாதனைகளையும் தந்துள்ளதாக திரௌபதி முர்மு தெரிவித்தார். கடந்த 10-11 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் நாடு தனது அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும், சமூக நீதி நிலைநாட்ட அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டினார். இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.

கடந்த ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், உணவு தானிய உற்பத்தியில் 350 மில்லியன் டன் என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். மின் வாகன உற்பத்தியில் புதிய உச்சத்தை அடைந்துள்ள இந்தியா, அசாமில் செமிகண்டக்டர் ஆலை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், விண்வெளி சுற்றுலா வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் நம்பிக்கை ஊட்டினார்.கட்டமைப்பு வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக மாறியுள்ளதாக திரௌபதி முர்மு தெரிவித்தார்.

நாடு முழுவதும் 150 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், மெட்ரோ கட்டமைப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதையும் அவர் சிறப்பாக குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் உரை இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை உற்சாகமாக விவரித்தது. வரலாற்று நினைவுகளுடன் தொடங்கி பொருளாதாரம், தொழில்நுட்பம், கட்டமைப்பு முன்னேற்றங்கள் வரை அரசின் சாதனைகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார். இந்த உரை நாட்டின் எதிர்காலத்துக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

error: Content is protected !!