பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும்
இந்தியாவின் சுவிட்சர்லாந்து என போற்றப்படும் காஷ்மீர் மாநிலத்தின் மீது பாகிஸ்தானுக்கு எபபோதுமே ஒரு உறுத்தல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது இன்று நேற்றல்ல, பாகிஸ்தான் உருவான நாள் முதல் காஷ்மீரை அது மனதுக்குள்ளேயே உரிமை கொண்டாடி வருகிறது.
அடைய முடியாது எனில் வெட்டென மற என்பார்கள். ஆனால் பாகிஸ்தானால் அப்படி இருக்க முடியவில்லை. எப்படியாவது காஷ்மீரை அடைவோம். அது முடியாவிட்டாலும், இந்தியாவை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தான் பாகிஸ்தான் செயல்படுகிறது.
இதற்காக பாகிஸ்தான் உருவான ஆண்டே காஷ்மீரை ஆக்கிரமிக்க போர் தொடுத்தது. இந்த போர் 1947-48 ம் ஆண்டுகளில் நடந்தது. இதை காஷ்மீர் போர் என்று சொல்கிறோம். சுமார் 14 மாதங்கள் இந்த போர் நீடித்தது. இறுதியில் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தக்கவைத்துக்கொண்டது. அதைத்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று நாம் சொல்கிறோம்.
இதற்கு அடுத்ததாக 1965, 1971 மற்றம் 1999 ஆகியவருடங்களிலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் தொடுத்தது. இதில் 1971 ல் நடந்த போர் மூலம் வங்கதேசம் உதயமானது. இது 13 நாட்களில் முடிவுக்கு வந்தது. அடுத்ததாக 1999ல் கார்கில் போர்.
கார்கில் போர் முடிந்து 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டதால், பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்த தழும்புகள் கூட மறைந்திருக்கும். எனவே தான் மீண்டும் இந்தியாவிடம் வாலாட்டத் தொடங்கி விட்டது.
இந்தியா தரப்பில் எத்தனையோ முறை ஆதரவு கரங்களை நாம் நீட்டியும், அவர்கள் தரப்பில் இருந்து விஷம் தோய்ந்த கரங்கள் தான் நமக்கு பரிசாக கிடைத்து உள்ளது. நம் இரு நாட்டு மக்களும் சகோதர சிநேகத்துடன் வாழவேண்டும் என பாகிஸ்தானுக்கு பஸ், ரயில் போக்குவரத்தை தொடங்கினோம். அவர்கள் தரப்பில் இருந்து கைமாறாக வெடிகுண்டுகள் தான் வந்தது.
இந்தியாவில் நாசவேலை செய்வோருக்கு அடைக்கலம் தருவதுடன், இந்தியாவில் நாசவேலை செய்ய ஒரு நாசவேலை கூட்டமே அங்கு உருவாக்கப்பட்டுகொண்டு இருக்கிறது. இது தான் பிரச்னைக்கே காரணம்.
பாகிஸ்தான் அரசு விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதை தடுக்க முடியாத அளவுக்கு அங்கு தீவிரவாதிகளின் கை ஓங்கி விட்டது. இன்னும் சொல்லப்போனால், தீவிரவாதிகள் விரும்பியதைத் தான் அங்குள்ள ஆட்சியாளர்களே செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
வன்முறை என்பது இருபுறமும் கூர்தீட்டப்பட்ட வாள். அதை எடுத்தவன் அந்த ஆயுதத்தாலே அழிவான். அதற்கு பாகிஸ்தான் தான் சிறந்த உதாரணம். எனவே தான் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுத்தள்ளினர். அதில் ஒருவர் கப்பல்படை வீரர். திருமணம் முடிந்து ஒருவாரம் கூட நிறைவுபெறாத நிலையில் தேனிலவுக்கு வந்தபோது அந்த வீரர் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மஞ்சள் குங்குமத்தோடு நீடுழி வாழ்க என மணமக்களை வாழ்த்துவார்கள். ஆனால் திருமணம் முடிந்த ஒருவாரத்தில் கடற்படை வீரரின் மனைவி மஞ்சள் குங்குமத்தை இழந்தார். அதற்கு நீதி கேட்டுத்தான் 7ம் தேதி அதிகாலை ஆபரேசன் சிந்தூரை(குங்குமம்) தொடங்கியது இந்தியா. இதில் 100 தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர்.
இந்தியா நடத்திய இந்த பதிலடியில் அப்பாவி பொதுமக்கள் யாருக்கும், எந்த சேதமும் இருக்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தது. அதன்படியே செய்தது. ஆனால் பாகிஸ்தான் ஏட்டிக்கு போட்டியாக காஷ்மீரில் புகுந்து அப்பாவி மக்களை சுட்டுத்தள்ளியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் பலியானார்கள்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தாக வேண்டிய நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்பட்டது. எனவே தான் லாகூர் வான் எல்லைகளை இந்தியா சேதப்படுத்தியது. காரணம் அங்கிருந்து தான் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாத கும்பலும் இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போதைய நிலவரப்படி இந்தியா தங்களின் நியாயத்தை உலகின் முக்கிய நாடுகளுக்கு எடுத்துரைத்து ஆதரவினை திரட்டி உள்ளது. இஸ்லாமிய நாடுகள் பலவற்றிடமும் இந்தியா நட்புறவுடனேயே இருக்கிறது. அந்த நாடுகளிடமும், பாகிஸ்தான் அத்துமீறல் குறித்து விளக்கி உள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று இரவு பாகிஸ்தான் காஷ்மீர் மாநிலத்தில் அடுத்தடுத்து தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டது. அத்தனை முயற்சிகளையும் இந்தியா முறியடித்து இருக்கிறது. நேற்று இரவு பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய ராணுவம்.
ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதன்கோட் விமான நிலையம், ராஜஸ்தானின் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று இரவு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் தகர்த்தது.
ராஜஸ்தானின் ஜெய்சல்மர் எல்லை அருகிலும் ஒரு பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்து தப்பி ஓடிய பாகிஸ்தான் விமானியை இந்திய ராணுவம் சிறைபிடித்தது.
பாகிஸ்தான் உடனான மோதல் முற்றிய நிலையில், பாதுகாப்பு கருதி இந்தியாவின் வட மாநிலங்களில் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பூந்தர், கிஷன்கர், சிம்லா, கங்கரா, பட்டிண்டா, ஜெய்சல்மர், ஜோத்பூர், பிகானேர், ஹல்வாரா, பதன்கோட், ஜம்மு, லே, முன்ட்றா, ஜாம்நகர், ஹிராசர் (ராஜ்கோட்), போர்பந்தர், கேஷோத், கண்ட்லா, புஜ் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.
நேற்று இரவு நிலவரத்தை பொறுத்தவரை இரு நாடுகளுக்கும் போர் மூண்டுவிட்டதையே காட்டியது. பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர், உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு முழுவதும் மின்தடை செய்யப்பட்டது. பஞ்சாப், அரியானா, சண்டிகர் மாநிலங்களில் அபாய சங்குகள் ஒலித்த வண்ணம் உள்ளது. மக்கள் வெளியே வரவேண்டாம் என்பதை எச்சரிக்கும் வகையில் இந்த சங்கொலி ஒலிக்கப்பட்டது. இன்று காலையிலும் சண்டிகர், பஞ்சாபில் சங்கொலி சத்தம் கேட்டபடியே இருந்தது. அதை பார்க்கும்போது போர்க்களத்தின் அத்தனை சமிக்ஞைகளும் அந்த மாநிலங்களில் உணரப்பட்டது. வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. இன்று காலை தான் மின் தொடர்பு கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தானின் முக்கிய இலக்கான டில்லி, ஆக்ரா, அமிர்தசரஸ், மும்பை நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அங்கும் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்வது குறித்து பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத சிங், முப்படை தளபதிகள், பாதுகாப்பு ஆலோசகர், ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஆசீம் முனிர் மற்ற ராணுவ அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அவரை பிரதமர் தான் நீக்கி விட்டு சாகிர் சம்சாத் மிர்சா என்பவரை நியமித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் அரசு 2 நாள் தாக்குதலிலேயே அலறி ஒப்பாரி வைக்கத் தொடங்கி இருக்கிறது. இந்தியா தாக்குகிறது. எங்களை காப்பாற்றுங்கள், எங்களுக்கு உதவுகள், அழிவில் இரந்து எங்களை காப்பாற்ற கடன் உதவி தாருங்கள் என பாகிஸ்தான் அரசு உலக நாடுகளிடம் கெஞ்சுவதாக ராய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில் தான், ‘எல்லையில் பதற்றத்தை குறைப்பதா, வேண்டாமா என முடிவு எடுப்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது’ என்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூ றி உள்ளார்.
அதே நேரத்தில் ஒவ்வொரு 25 ஆண்டுகளுக்கும் ஒரு முறை பாகிஸ்தானுடன் போர் தொடுப்பதற்கு பதிலாக இந்த முறை பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். 100 ஆண்டுகளாவது அதன் தழும்புகள் இருக்க வேண்டும். அப்படி ஒரு நடவடிக்கை இந்தியா எடுக்க வேண்டும் என்று தான் தீவிரவாதத்தை, வன்முறையை எதிர்க்கும் ஒவ்வொருவரின் உள்ளமும் வேண்டுகிறது.