டிட்வா புயலால், இலங்கையிலும் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. திருகோணமலை, பதுல்லா, மாத்தறை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவால் இதுவரை, 56 பேர் பலியாகி உள்ளனர்.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். மேலும், அங்கு நிலைமை மேம்படுத்த தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.
அதன்படி, ஆப்பரேஷன் சாகர் பந்து என்ற பெயர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கிய மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய விமானப்படை மூலம், இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘டென்டுகள், தார்பாய்கள், போர்கள், மருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என 12 டன் எடை கொண்ட மனிதாபிமான உதவி பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

