இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து உள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்பார்த்து இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார். அதே நேரத்தில் இந்த அதிக வரிவிதிப்பு அமெரிக்காவுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரியின் இரண்டு கண்களையும் பிடுங்கி விடுவேன் என டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
அமெரிக்காவின் இந்த பூச்சாண்டி தனத்திற்கு இந்திய அரசு சரியான பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வாய்ப்பு இல்லை. 140 கோடி இந்திய மக்களின் நலனுக்கு சில நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும் என இந்தியா கருத்து தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் சீனாவில் ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். 6 வருடங்களுக்கு பிறகு மோடி சீனா பயணிக்கிறார். அப்போது அவர்கள் அமெரிக்காவுக்கு கூட்டு பதிலடி கொடுக்கும் வகையில் சில திட்டங்களை வகுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் இந்த பயணம் அமெரிக்க அதிபருக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.