முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இன்று தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மறுத்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் வெல்லமட்டி நடராஜன் கூறியதாவது:-
சென்னையில் தி.மு.க.வில் இன்று நான் இணைவதாக வந்த தகவல் தவறானது.
நான் சென்னை செல்லவில்லை. திருச்சியில் மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் இருக்கிறேன். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று இன்றளவும் பயணித்து வருகின்றேன். அவர், எந்த முடிவு எடுத்தாலும் அது ஆணித்தரமான நிரந்தரமான முடிவாக இருக்கும் என கருதுகிறேன். கூட்டணி குறித்து கருத்து சொல்லும் பெரிய இடத்தில் நான் இல்லை. நான் ஒன்றும் தலைவர் கிடையாது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைவதாக வந்த தகவலை நானும் பத்திரிக்கை படித்து தான் தெரிந்து கொண்டேன்.
அது பற்றி அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. இவ்வாறு வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

