சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் பார்வதி என்ற இன்ஸ்டா பிரபலம் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் மீது ஈவிபி ப்லிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி புகார் அளித்து இருந்தார்.அது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
பின்னர் இதுதொடர்பாக ஆவடி காவல் ஆணையரகத்தில் பேட்டியளித்த சந்தோஷ் ரெட்டி, “பார்வதி என்பவரை எனக்கு 4 வருடங்களாக தெரியும். அவர் நகைகள் மற்றும் ஆடைகளை குறைந்த விலைக்கு வாங்கித்தரக்கூடிய நபர். அதுபோல தான் என்னிடமும் பணத்தை பெற்றார். அதன்பின்னர் பணத்தையும் திரும்பத்தரமால், பொருட்களையும் திரும்பத்தராமல் இருந்துவந்தார். இதுதொடர்பாக நான் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னர் அவர் உடனே சென்று பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் என்மீது புகார் அளித்துள்ளார். இவர்களின் தொழிலே மோசடி செய்வதுதான் என்பது எனக்கு தெரியவந்தது. அவர்கள் என்மீது புகார் அளித்த தேதிக்கு பின்னர்தான் நான் அவருக்கு பணத்தை வங்கிக் கணக்கில் அனுப்பினேன். நான் ஆர்டர் செய்த பொருட்கள் அனைத்திற்கும் அந்தந்த நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தினேன். அதன்பின்னர் பொருட்கள் அனைத்தும் பார்வதி வீட்டிற்கு வந்தது. அந்த தகவலை எனக்கு தெரிவித்து டிரைவருடன் காரை அனுப்பி எடுத்துக்கொள்ளுமாறு சொன்னவர்கள் அதன்பின்னர் மோசடி செய்துவிட்டனர்.
இதுதொடர்பாக நசரத் பேட்டை காவல் நிலையத்தில் 34 லட்ச ரூபாய் மோசடிக்கான புகார் கொடுத்து அதற்கு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்து, ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததற்கான புகாரை அளித்துள்ளேன். எங்களைப்போன்ற பல தொழிலதிபர்களை குறி வைத்து மோசடி செய்துள்ளனர். இதேபோன்று மேலும் அவர்கள் மீது புகார் கொடுக்க பலர் வெளி வருவார்கள். குரோம்பேட்டை முகவரியை கொடுத்துவிட்டு பெங்களூரில் இருப்பார்கள். அதுபோன்றுதான் என்னிடம் மோசடி செய்தார்கள். என்னிடம் எந்த விசாரணையும் செய்யாமல் பெங்களூரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னிடம் இருந்து மொத்தம் ஒரு கோடியே 38 லட்சம் மோசடி செய்துள்ளனர். முதலில் 3 கோடி அனுப்பினேன், அதில் வரிப்பிரச்சனை வரும் எனக்கூறி திருப்பி அனுப்பினர். பின்னர் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நேரடியாக பொருட்களுக்கான பணத்தை அனுப்புமாறு கூறினார்கள். அப்படி அனுப்பிய பின்னர் வேறு ஒருவர் பெயரில் பொருட்களை வாங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் பிலிம் சிட்டி வைத்திருப்பதால் எங்கள் பெயரைக் கெடுத்தால் பணத்தை திரும்ப கேட்காமல் பின் வாங்கிவிடுவோம் என்று நினைக்கிறார்கள். பலருக்கு பரிசுகள் கொடுத்து மறைமுகமாக செல்வாக்கை பயன்படுத்துகிறார்கள். அப்படி தான் என்மீது பாலியல் சீண்டல் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த மாதம் பார்வதி சந்தோஷ் ரெட்டி மீது பெங்களூருவில் புகார் அளித்து இருந்தார். அதில் தன்னை காதலிக்க வில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தாக கூறியிருந்தார். ஆனல் அவர் புகார் அளிப்பதற்கு முன்பே சந்தோஷ் ரெட்டி நசரத்பேட்டை மற்றும் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதும்,வங்கி கணக்கில் பணம் செலுத்தியதற்குமான ஆதாரங்களை வெளியிட்டார்.

