சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுஷ்மிதா (24) என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தோழி ஐஸ்வர்யா தன்னிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சுஷ்மிதாவிற்கு இன்ஸ்டாகிராம் வழியாக மலேசியாவைச் சேர்ந்த ரேகா, சென்னையைச் சேர்ந்த துர்கா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தோழிகளாக அறிமுகமாகியுள்ளனர். இதில் ஐஸ்வர்யா தனது தந்தையின் அறுவை சிகிச்சைக்காகப் பணம் தேவைப்படுவதாகக் கூறியதையடுத்து, தோழிகள் அனைவரும் அவருக்குப் பண உதவி செய்துள்ளனர். ஒரு கட்டத்தில், தான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகக் கூறிய ஐஸ்வர்யா, சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் மாதம் 4 ஆயிரம் டாலர் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
முதலில் மறுத்த சுஷ்மிதா, ஐஸ்வர்யாவின் தொடர் வற்புறுத்தலால் தனது நல்ல வேலையை ராஜினாமா செய்துவிட்டு சிங்கப்பூர் வேலைக்குச் சம்மதித்துள்ளார். இவருடன் ரேகா மற்றும் துர்காவும் சம்மதித்துள்ளனர். வேலைக்கான செலவு எனக் கூறி ஐஸ்வர்யா இவர்களிடம் சிறுகச் சிறுக ரூ.24 லட்சம் வரை வசூலித்துள்ளார். பின்னர் துர்கா மட்டும் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொண்டார்.
ஐஸ்வர்யா கொடுத்த பணி நியமன ஆணை போலியானது என்பதும், அவர் அந்த நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்பதும் பின்னரே தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தரமணி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ்சி பட்டதாரி ஐஸ்வர்யாவை (28) கைது செய்தனர். அவர் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இந்த மோசடியை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இவரிடம் வேறு யாரும் ஏமாந்துள்ளனரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

