Skip to content

சர்வதேச திரைப்பட விழா துவக்கம்- ரஜினிக்கு சிறப்பு விருது

56- வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, நவ 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது.அந்தவகையில் 56- வது ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. மேலும் திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன.

இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் இசையமைப்பாளர் சலீல் சௌதரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. முன்னதாக, இந்த விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன. அதில் தமிழகத்தில் இருந்து 2 திரைப்படங்கள் மற்றும் ஒரு குறும்படம் ஆகியவை தேர்வாகியுள்ளன. அதன்படி கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் Golden peacock என்ற சர்வதேச போட்டி பிரிவிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . மேலும் விழாவின் ஓபனிங் ஃபிலிம் ஆகவும் இன்று அமரன் திரையிடப்படுகிறது. மேலும் இந்தியன் பனோரமா என்ற பிரிவில் நடிகர் அப்புக் குட்டியின் பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள ஆநிரை என்ற குறும்படமும் தேர்வாகியுள்ளது.

தூத்துக்குடி, நெல்லைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய ரஜினி!

இந்த விழாவில் சிறப்பம்சமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருது இறுதி நாளன்று வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார். இதனை நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக சென்று ஏற்றுக்கொள்ள உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் சிறந்த நடிப்புக்கான விருதுகளும் பிரபலங்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த விழாவை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவா மாநில அரசு ஆகியவற்றால் இணைந்து நடத்துகின்றன.

error: Content is protected !!