ஐபிஎல் போட்டியில் 49வது லீக் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே தரப்பில் சாம் கர்ரன் 88 ரன்கள் விளாசினார். டெலவால்ட் பிரேவிஸ் 32 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ஹாட்-ட்ரிக் உடன் 4 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார் பஞ்சாப் கிங்ஸ் சுழற்பந்து வீச்சாளர் சஹல்.
அருமையாக இலக்கை விரட்டிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், 42 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஷாங் சிங், 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஷெக்டே 1 ரன்னில் அவுட் ஆனார். 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து பஞ்சாப் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிபட்டியலில்(13 புள்ளிகள்) இரண்டாம் இடம் பிடித்தது. அதே நேரத்தில் சென்னை அணி லீக்குடன் நடையை கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. சென்னை அணி 10 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த மோசமான தோல்விகள் மூலம் பிளே ஆப் சுறறுக்கு செல்ல முடியாத நிலை அந்த அணிக்கு ஏற்பட்டு விட்டது.
சென்னை அணி பெற்ற 8 தோல்விகளில் சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமே 5 தோல்விகள் கிடைத்துள்ளது. 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே பிளே ஆப் சுற்றில் நுழைய முடியாமல் வெளியேறுவது இது 4 முறை.
சென்னை அணி இன்னும் 4 லீக் ஆட்டங்களில் ஆட வேண்டி உள்ளது. அந்த 4 போட்டிகளில் வென்றாலும் கூட பிளே ஆப் சுற்றுககுள் வரமுடியாது. எனவே அந்டத போட்டிகள் சம்பிரதாயத்துக்காக நடக்கும் போட்டியாகத்தான் இருக்கும்.