ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று லக்னோவில் நடந்த போட்டியில் லக்னோ, ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் வென்றது. ஆனாலும் அந்த அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாதபடி வெளியேறிவிட்டதால் அந்த அணிக்கு அந்த வெற்றியால் எந்த பலனும் இல்லை.
அதே நேரத்தில் தோல்வி அடைந்த லக்னோ அணியும், நேற்றைய தோல்வி மூலம் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையமுடியாதபடி வெளியேற்றப்பட்டது. ஏற்கனவே ராஜஸ்தான், சென்னை அணிகள் வெளியேற்றப்பட்டு விட்டன.
அதே நேரத்தில் குஜராத்(18 புள்ளி), பெங்களூரு(17), பஞ்சாப்(17) ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விட்டது. இன்னும் ஒரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வேண்டும். அது எந்த அணி என்பதை உறுதி செய்ய மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
தற்போது மும்பை அணி 14 புள்ளிகளும், டெல்லி 13 புள்ளிகளும் பெற்றுள்ள நிலையில் இந்த இரு அணிகளும் இன்னும் தலா 2 போட்டிகளில் ஆட வேண்டி உள்ளது. எனவே 2 போட்டிகளும் 2 அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நாளை இரவு 7 .30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதுகிறது. இதில் மும்பை வெற்றி பெற்றால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும். ஆனால் டெல்லி வெற்றி பெற்றால், அது மேலும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
எனவே நாளை நடைபெறும் போட்டி மும்பை, டெல்லி அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை போட்டி டிராவாகி விட்டால், அதற்கு அடுத்ததாக மும்பை, டெல்லி அணிகள் பஞ்சாப் அணியுடன் ஆட வேண்டி உள்ளது. அடுத்து வரும் 2 போட்டிகளிலும் மும்பை தோற்று, 2 போட்டிகளிலும் டெல்லி வெற்றி பெற்றால் டெல்லி பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனாலும் மும்பை ரன்ரேட் அதிகமாக வைத்திருப்பதால் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும், அந்த அணியே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய அதிக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது