ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டம் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய மும்பை அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்சை தொடங்கினர்.
இதில் ரிக்கல்டன் 61 ரன்களும், ரோஹித் சர்மா 53 ரன்களும் விளாசி தொடக்கத்திலேயே அதிரடி காட்டினர். சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 23 பந்துகளில் தலா 48 ரன்கள் எடுத்து, 20 ஓவர் முடிவில் 217 ரன்கள் குவித்தனர். மும்பை அணி ஒரு நல்ல ஸ்கோரை எட்டி இருந்தது.
ஜெய்ப்பூர் அணியின் ஓப்பனர் சூர்யவன்சி, ஜெய்ஸ்வால் சமாளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மைதானம் 2வது இன்னிங்சை பார்க்க ஆவலுடன் காத்திருந்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வாலும், சூர்யவன்சியும் இறங்கினர்.
கடந்த ஆட்டத்தைப்போல சிக்சர் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யவன்சி, 2வது பந்திலேயே ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார் . இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் ஜெய்வால் 2 சிக்சர் அடித்த நிலையில் 13 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
மும்பையின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழவே ராஜஸ்தான் அணி இலக்கை எட்ட தடுமாறியது. அதிகபட்ச ஸ்கோராக ஜோஃப்ரா ஆர்ச்சர் மட்டுமே 30 ரன்கள் எடுத்தார். 16 ஓவர்களில் 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 6 வெற்றிகள் பெற்று முதலிடத்துக்கு(14 புள்ளிகள்) உயர்ந்துள்ளது. இன்னொருபுறம் இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஏற்கனவே சென்னை அணி வெளியேறிய நிலையில் இப்போது ராஜஸ்தானும் வெளியேறி உள்ளது.