திருச்சி என்எஸ்பி ரோட்டில் 200க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் இருந்தன. தெப்பக்குளத்தை சுற்றி மற்றும் என்எஸ்பி ரோடு முழுவதும் இருபுறமும் கடைகள் பரபரப்பாக இயங்கின. இந்த சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமே இந்த கடைகள் தான். இதன்மூலம் 200 குடும்பங்கள் பிழைத்து வந்தன.
ஆனால் 2 வாரங்களுக்கு முன் இந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் என்எஸ்பி ரோடு வெறிச்சோடி காணப்படுகிறது.
வியாபாரிகளுக்கு மாற்று இடமாக ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்காத வியாபாரிகள், மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் தான் வியாபாரம் நடக்கும் என கூறி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் அதே என்எஸ்பி ரோட்டில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான சாரதாஸ் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தரைக்கடைகளை அகற்ற மாநகராட்சியின் உச்ச நபருக்கும், இன்னும் சில அதிகாரிகளுக்கும் லட்சக்கணக்கில் பணம் கைமாறி உள்ளதாம். மேலும் சிறு வியாபாரிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வேலைகளிலும் சாரதாஸ் இறங்கி உள்ளதாம்.
குறிப்பாக நாளிதழ்களை தொடர்பு கொண்டு சிறு வியாபாரிகளின் போராட்டம் தொடர்பான எந்த செய்தியும் வந்து விடக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளதாம். நமக்கு எதுக்கு வம்பு, விளம்பரம் பாதிக்கும் என்று நினைத்து நாளிதழ்களும் சிறு வியாபாரிகளை கண்டுகொள்வதில்லையாம்.

