இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான, பிரபலமான விழாக்களில் தசராவும் ஒன்று. இது, அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில், தசரா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரும் சமூக நல ஆர்வலருமான பானு முஷ்டாக் அழைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மைசூரு தசரா விழாவைத் தொடங்கி வைக்க, எழுத்தாளர் பானு முஷ்டாக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்த மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2022ல் புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் பானு முஷ்டாக், வழக்கறிஞர் மட்டுமல்ல சமூக செயற்பாட்டாளரும் ஆவார். தசரா விழா ஒரு பாரம்பரியமான இந்து விழா என்றும், அதனை இஸ்லாமியரான பானு முஷ்டாக், இந்து விழாவில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைப்பது ஏற்புடையதல்ல என்றும் கூறி, பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கன்னட மொழிக்கு எதிராக அழைக்கப்பட்டவர் சில கருத்துகளை வெளிப்படுத்தியதாகவும், இந்து அல்லாதவராக இருப்பதால், மத விழாக்களையும் உள்ளடக்கிய தசரா விழாவைத் தொடங்கி வைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர். இதையடுத்து அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையின்படி, அரசின் நிகழ்ச்சி நிரலை பிறர் தீர்மானிக்க முடியாது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அரசின் நிகழ்வில் பங்கேற்கும் உரிமை உள்ளது. தசரா விழாவில் பானு முஷ்டாக் பங்கேற்பது அரசியல் சாசனத்தை மீறும் செயல் அல்ல. பல பொறுப்புகளில் இருந்தவர் பானு முஷ்டாக், தசரா விழாவில் பங்கேற்க தகுதியானவர்தான். பானு முஷ்டாக் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்பதை ஏற்க முடியாது. எனவே மனுதாரர்களின் வாதங்களை நிராகரித்து கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஒரு மதத்தை சேர்ந்தவர் மற்றொரு மதத்தின் விழாக்களில் பங்கேற்பது தவறல்ல என கர்நாடக ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.