சமீபத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,”அ.தி.மு.க.வை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, ஆட்சி அதிகாரத்தைவிட அ.தி.மு.க.வுக்கு தன்மானம்தான் முக்கியம். ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை சிலர் கபளீகரம் செய்ய பார்த்தனர்.
ஆனால், அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றி கொடுத்தது ஒன்றிய பா.ஜ.க. அரசுதான். அதனால்தான், இப்போதும் பா.ஜ.க.-வுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “நான் யாருக்கும் பயப்படமாட்டேன், எங்களுக்கு தன்மானம்தான் முக்கியம் என பேசும் இபிஎஸ், இப்போது டெல்லிபோய் ஆதரவு கேட்க வேண்டிய அவசியம் என்ன?
டெல்லியில் தலைமைக் கழக கட்டட அலுவலகத்தை பார்க்கப்போகிறேன் எனக்கூறிவிட்டு, 6 கார்கள் மாறி திருட்டுத்தனமாக உள்துறை அமைச்சரை சந்தித்தார் பழனிசாமி. ஆனால் இன்று புருடாவிட்டு பேசுகிறார். அதிமுகவை பா.ஜ.க காப்பாற்றியதாக இ.பி.எஸ் கூறுவது தவறு. தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல.
அதிமுகவை காப்பாற்றியது பா.ஜ.க அல்ல, அதிமுக எம்.எல்.ஏக்கள் தான். சசிகலா அவர்களின் ஆலோசனையைக் ஏற்று எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். துரோகத்தை தவிர இபிஎஸ்-க்கு வேறு எதுவும் தெரியாது” என்றார். மேலும் தொடர்ந்து பேசிய தினகரன், “சிலர் கைக்கூலிகளாக இருக்கின்றனர் என செங்கோட்டையனை மறைமுகமாக குறிப்பிட்டு பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி.
செங்கோட்டையன் யாருடைய கைக்கூலி என அவர் சொல்கிறார்? டிடிவி தினகரனின் கைக்கூலியா? இல்லை ஓபிஎஸ்ஸின் கைக்கூலியா? பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாக பேசுவதற்கு காரணம் தோல்வி பயம். அதனால்தான் உளறுகிறார். உறுதியாக இந்தத் தேர்தலில் பழனிசாமி தோற்கடிக்கப்படுவார்” என்று பரபரப்பாக பேசியுள்ளார்.