Skip to content

திருச்சி எம்பி தொகுதியில் நடைபெறும்..பசுமை நெடுஞ்சாலை திட்டங்கள் என்னென்ன?..

  • by Authour

திருச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், Greenfield Highways எனப்படும் பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திடம் திருச்சி எம்பி கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி பதில் வழங்கியுள்ளார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:
எம்பி துரைவைகோவின் கேள்வி:

  1. திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டம்
  2. சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை நெடுஞ்சாலைத் திட்டம்
  3. திருச்சி அரை-வட்ட வளைச் சாலைத் திட்டம் (ஜீயபுரம் – பஞ்சப்பூர் – துவாக்குடி) ஆகியவற்றின் தற்போதைய நிலை மற்றும்
  4. திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பால்பண்ணை – துவாக்குடி அணுகுச் சாலையின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும்,

இப்பகுதியில் இத்திட்டங்களை விரைவுபடுத்தி, போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு ஒன்றிய அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் தகவல் தர வேண்டும் என்றும் கேட்டிருந்தேன்.

அதற்கு, அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரியின் பதில்…

  1. கரூர் – கோவை வழித்தடம்
  2. சென்னை – திருச்சி – மதுரை வழித்தடம்
  3. திருச்சி வளைச் சாலை (Ring Road) ஆகிய திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report – DPR) தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவது குறித்த இறுதி முடிவு DPR முடிவுகள், தேவையான இணைப்பு வசதிகள், போக்குவரத்து அடர்த்தி மற்றும் பிரதமரின் ‘கதி சக்தி’ திட்ட மாஸ்டர் பிளானுடனான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பால்பண்ணை – துவாக்குடி அணுகுச் சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவதாக, திருச்சி – கரூர் – கோவை சாலை வழித்தடத்தில் ஒருபுறம் காவிரி ஆறும், மறுபுறம் இரயில் பாதையும் உள்ளதால், சாலையை விரிவாக்க முடியாது என்பதால் புதிய பசுமை நெடுஞ்சாலை (Greenfield Highway) அவசியம் என்று 2019-லிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது வரை, திருச்சி – கரூர் – கோவை பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாதது பற்றி, எனது கேள்வியில் தெளிவாகக் கேட்கப்பட்டிருந்தும், பதிலில் கரூர் – கோவை வழித்தடப் பகுதி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது; திருச்சி – கரூர் பகுதி தவறவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சரை நேரில் சந்தித்து விரிவான தெளிவு பெற உள்ளேன். இரண்டாவதாக, சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை நெடுஞ்சாலை திட்டமும், திருச்சி அரை-வட்ட வளைச் சாலையும் (ஜீயபுரம் – பஞ்சப்பூர் – துவாக்குடி) தற்போது DPR தயாரிப்பு நிலையில் உள்ளதும், பால்பண்ணை – துவாக்குடி அணுகுச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியிருப்பதும் நல்ல முன்னேற்றமாகும்.

இந்த முக்கிய பசுமை நெடுஞ்சாலைத் திட்டங்களும், வளைச் சாலைத் திட்டமும் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். இவை நிறைவேறினால் போக்குவரத்து நெரிசல் குறையும், பயண நேரம் மிச்சமாகும், பொருளாதார வளர்ச்சி பெருகும்.

எனவே, இப்பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மக்கள்முன் வைப்பதோடு, ஒன்றிய அரசு மேற்கொள்ளும் இத்திட்டப்பணிகள் முழுவதுமாக நிறைவேற்றப்படும் வரை இடைவிடாமல் பின் தொடர்ந்து எனது திருச்சி தொகுதி மக்களின் நலனுக்காக அயராது பாடுபடுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!