ரசிகர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே நேரடியாக இணையும் புதிய சமூக வலைதள ஆப் ‘Fanly’யின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு, தனக்கே உரிய நகைச்சுவையும், உண்மையான உரையாடலும் கலந்த பேச்சால் அரங்கத்தையே சிரிப்பலைகளால் நிரப்பினார்.
மேடையில் இருந்த தொழில்நுட்ப நிபுணர்களையும், ஆப் உருவாக்கியவர்களையும் பார்த்த சிவகார்த்திகேயன், “இந்த மேடையில் இருக்கும் அத்தனை பேரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எனக்குத்தான் மூளை கொஞ்சம் கம்மிதான் போலிருக்கே! அதனாலதான் நடிக்க முடிகிறது. மூளை ரொம்ப அதிகமா இருந்தா நான் இயக்குநர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருப்பேன். அதனால இப்படி மூளை சற்று குறைவா இருக்கிறதே நல்லதுதான்!” என்று தன்னையே கிண்டல் செய்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.
ரசிகர்கள் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், “எனக்கு எப்போதும் என்னை வணங்கும் ரசிகர்கள் தேவையில்லை. அவர்கள் கடவுளையும், அப்பா-அம்மாவையும் வணங்கினாலே போதும். என்னோடு அன்பா பேசணும், அண்ணனா பழகணும் – அதுவே போதும். அதனாலதான் எல்லோரையும் தம்பி-தங்கச்சி என்று அழைக்கிறேன்” என்று மிகுந்த பாசத்தோடு கூறினார். இந்த வார்த்தைகள் அரங்கில் இருந்த ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தின.
சமூக வலைதளங்களைப் பற்றி தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், “இப்போது சமூக வலைதளங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. எல்லா பிளாட்பார்ம்களிலும் என் பெயரில் கணக்கு இருக்கு, ஆனால் அதை வேறொருத்தர் தான் நிர்வகிக்கிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவ்வப்போது போவேன், அதிலும் தப்பு செய்வேன் என்பதால் இப்போது அதையும் தொடுவதில்லை. இப்போது எதிர்மறை கருத்துகளும், பொய் செய்திகளும்தான் வைரலாகிறது. ‘பொய்யாவது சொல்லி வைரல் ஆகலாம்’ என்று நினைக்கிறார்கள்” என்று வேதனையோடு தெரிவித்தார்.
‘Fanly’ ஆப் போன்ற புதிய தளங்கள் ரசிகர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே நேர்மையான, அன்பான உறவை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த சிவகார்த்திகேயன், “இங்கு எல்லோரும் அண்ணன்-தம்பி, அக்கா-தங்கச்சியாகப் பழகலாம். இதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது” என்று முடித்துக்கொண்டார். அவரது உரையாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

