கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்தனர். ஹேமமாலினி தலைமையிலான அக்குழுவினர், அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத், ”கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக கள ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிய தமிழகம் வந்துள்ள MP ஹேமமாலினி தலைமையிலான NDA எம்.பிக்கள் குழுவை, த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து பேச வேண்டும். நீதி கிடைக்க துணை நிற்க வேண்டும்” என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய பாஜக எம்.பி ஹேமமாலினி, ”பெரிய நடிகருக்கு, சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை, விஜயை பார்க்கவே பெண்கள், சிறுமிகள் என பலரும் வந்துள்ளனர். பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது. என்ன நடந்தது என்ற அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளோம்.
அரசியல் வரலாற்றில் இதுபோன்ற விபத்து இதுவரை நடந்ததில்லை, விஜய் பரப்புரையின்போது மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்டவை சந்தேகத்தை கிளப்புகிறது. பெரிய நடிகரின் பரப்புரைக்கு குறுகளான இடத்தை வழங்கியது ஏன்?” என்று கூறியிருக்கிறார்.