டில்லி பாராளுமன்ற Budget கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி தொடர்பாக பெரிய அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முன்னாள் இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய இன்னும் வெளியிடாத நினைவுக் குறிப்பை மேற்கோள் காட்ட முயன்றபோது அவைத் தலைவர் அதனை தடுத்ததாக கூறப்படுகிறது. பாராளுமன்ற விதிமுறைகளின்படி வெளியிடப்படாத ஆவணங்கள் அல்லது உறுதி செய்யப்படாத தகவல்களை அவையில் பயன்படுத்தக் கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து லோக்சபாவில் கடும் பதற்றம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அவை நடவடிக்கைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. ராகுல் காந்தி சீனா-இந்தியா எல்லை பதற்றம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு விஷயங்களை எழுப்ப முயன்றபோது பேச விடப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். சில சந்தர்ப்பங்களில் அவை செயல்பாடுகள் முழுமையாக முடங்கியதுடன், எதிர்க்கட்சித் எம்.பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இந்த விவகாரம் நாடாளுமன்ற விவாதங்களின் நடைமுறை, பிரதமரின் அணுகுமுறை, எதிர்க்கட்சிகளின் உரிமை ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி இதை ஜனநாயகத்திற்கு எதிரான போக்கு என்று விமர்சித்து வருகிறது.
காங்கிரஸ் தலைவர்கள் இதை பாஜகவின் ஆணவத்தின் வெளிப்பாடு என்று சாடியுள்ளனர்.ஜெய்ராம் ரமேஷ் இந்த விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச முடியாவிட்டால் விவாதமே அவசியமில்லை” என்று கூறிய அவர், பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் பேசிய பிறகே உரையாற்றுவேன் என்று கூறுவது தவறு என்று சுட்டிக்காட்டினார்.
இது அவையின் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.மேலும் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “அவையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் போல் பேசுவார். நேரு உள்பட காங்கிரஸ் தலைவர்களை அவமதிப்பார்” என்று காட்டமாக தெரிவித்தார். பிரதமரின் இந்த அணுகுமுறை நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை குறைப்பதாகவும், எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். இந்த கருத்துகள் காங்கிரஸ் – பாஜக இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

